2018-02-02 15:22:00

2018ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை குறித்து கத்தோலிக்கர்


பிப்.02,2018. இந்திய மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2018ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், ஏழைகள் மற்றும் தலித் மக்களின் நலனுக்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்ற அதேவேளை, இவை அமல்படுத்தப்படுவதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று, இந்திய கத்தோலிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை குறித்து ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த, தலித் கிறிஸ்தவர் உரிமைகள் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், இயேசு சபை அருள்பணி Axj Bosco அவர்கள், இந்த அறிக்கையில், கிராமப்புற ஏழைகள் மீது சிறப்பான கவனம் செலுத்தப்பட்டிருப்பதை உணர முடிகின்றது என்று கூறினார்.

மேலும், நிதிநிலை அறிக்கையிலுள்ள தேசிய நலவாழ்வு பாதுகாப்பு திட்டம், சிகிச்சை பெறுவதற்கு வசதியற்ற, பத்து கோடி ஏழை குடும்பங்களுக்கு உதவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆயினும், இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை, பகிரப்படும் முறை குறித்து விழிப்பாயிருக்க வேண்டும் என்று, இந்திய காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Frederick D'Souza அவர்கள் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த தேசிய நலவாழ்வு பாதுகாப்பு திட்டம், வருகின்ற அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது, 2018ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், உலக அளவில் பரவலாக பேசப்படும் பெரிய திட்டம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.