2018-02-10 14:53:00

பொதுக்காலம் 6ம் ஞாயிறு - உலக நோயாளர் நாள் - ஞாயிறு சிந்தனை


திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், பார்கின்சன்ஸ் (Parkinson’s) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற உண்மை, 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தான் ஒரு நோயாளர் என்பதை உணர்ந்ததும், நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன் தன்னையே அவர் இணைத்துக்கொண்டார். நோயுற்றோரை மையப்படுத்தி, 1992ம் ஆண்டு, உலக நோயாளர் நாளை, அவர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று, இந்த உலகநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிப்ரவரி 11ம் தேதி, இந்த ஞாயிறு, 26வது முறையாக, உலக நோயாளர் நாளை நாம் சிறப்பிக்கின்றோம்.

நோயாளருக்கென ஓர் உலக நாளை அர்ப்பணிப்பது குறித்து, நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும், எதிர்மறையான எண்ணங்கள் பெருமளவு நம் மனதில் உருவாவதால், இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். நோயை நாம் கொண்டாடவில்லை, மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு, இவற்றையும், நோயுற்றோர் மீது மற்றவர் காட்டும் அக்கறை, பரிவு  இவற்றையும், நாம் கொண்டாடுகிறோம். பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட புனித இரண்டாம் ஜான்பால், இந்த நோயோடு 14 ஆண்டுகள் எவ்விதம் வாழ்ந்தார் என்பதையும், நோயுற்றோர் பலருக்கு நம்பிக்கையாகத் திகழ்ந்தார் என்பதையும் நாம் அறிவோம். நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களிலிருந்து நமக்குத் தேவையான, தெளிவானப் பாடங்களைப் பயில, தொடர்ந்து, மூன்றாவது வாரமாக, நோயுற்றோரை இயேசு குணமாக்கும் மற்றொரு நிகழ்வை, இந்த ஞாயிறன்றும் சிந்திக்க வந்திருக்கிறோம்.

நலம் பெறுவதற்கு, மருத்துவ உதவிகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒருவர் நலமடைவதற்குத் தேவையான முதல் படி, தான் நலமடைவோம் என்று, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கை. இந்தக் கருத்தை சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். நமது நம்பிக்கையின் ஊற்றான இறைவனை நாடிவருவதால் குணமடைகிறோம் என்பதை, ஒரு மருத்துவரே தெளிவாகக் கூறியுள்ளார்.

ஹென்றி மிச்செல் (Henry Mitchell) என்ற பேராசிரியர், கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. மருத்துவர் சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து, செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று மருத்துவர் சொன்னதும், அவர் மிக அதிக அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் மிச்செல், அவரிடம் சொன்னார். மருத்துவரோ, மறுமொழியாக, "நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவது ஒன்றையே, நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவது, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார். இதைத்தான் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் (Banjamin Franklin), வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.

ஒருவர் நலம் அடைவதற்கு, முதலில், இறைவனின் அருள், இரண்டாவது, நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மூன்றாவது, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசையில், நம் சிந்தனைகள் அமையவேண்டும்.

உலக நோயாளர் நாளை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் சிறப்பித்த மற்றொரு முக்கியமான நாளும் நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி, அல்லது, அதற்கு அருகில் வரும் ஞாயிறன்று, தொழுநோயாளர் உலக நாள்  கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 28, ஞாயிறன்று, நாம் தொழுநோயாளர் உலக நாளைக் கடைபிடித்தோம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பைத் தருகின்றன. இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள் இதோ:

மாற்கு நற்செய்தி 1: 40-42

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இப்போது நாம் கேட்ட இப்பகுதியை, “ஆண்டவர் வழங்கும் நற்செய்தி” என்று, உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்வு, நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்வைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும், நல்ல செய்திதான். அந்த சொற்களைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இன்றைய நற்செய்தியில், தொழுநோயாளரைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், மரியாதை கலந்த சொற்களாக ஒலிக்கின்றன. இந்த அழகிய மாற்றம், கடந்த சில ஆண்டுகளாக, நம் சமுதாயத்தில் உருவான மனமாற்றம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், நாம் பயன்படுத்திய விவிலியத்தில், தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட நமது தமிழ் விவிலியத்தில், இன்றைய நற்செய்தி பகுதி எவ்விதம் எழுதப்பட்டிருந்தது என்பதையும், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்டு, இப்போது நாம் பயன்படுத்தும் விவிலியத்தில் இதே பகுதி எவ்விதம் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இணைத்துப் பார்த்தால் நாம் அடைந்துள்ள மனமாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம். 1986 விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இதுதான்:

மாற்கு நற்செய்தி 1: 40

ஒரு நாள் தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து முழந்தாளிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்” என்று வேண்டினான்.

இதே இறைவாக்கியம், 1995 விவிலியப் பதிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

மாற்கு நற்செய்தி 1: 40

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார்.

பழைய விவிலியப் பதிப்பில் தொழுநோயாளியைச் சுட்டிக்காட்ட, அவன், என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய விவிலியப் பதிப்பில், தொழுநோயாளரை, அவர், என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். தொழுநோயாளரை, ஒரு மனிதராக மதித்து, அவருக்குரிய மரியாதையை வழங்குவது, நாம் அண்மைய ஆண்டுகளில் பின்பற்றும் அழகான முன்னேற்றம்.

தொழுநோய், தொழுநோயாளர் என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். 1986க்கும் முந்தைய விவிலியப் பதிப்புக்களில், ‘தொழுநோயாளர்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘குஷ்டரோகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கிலத்திலும் leper என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

‘குஷ்டரோகி’ என்பதற்கும், ‘தொழுநோயாளர்’ என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. வெறும் சொற்களில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல. மாறாக, அவர்களைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை, அச்சொற்கள் வெளிப்படுத்துகின்றன. இப்போது, ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான சொற்களைப் பயன்படுத்தும் அளவு நாம் பக்குவமடைந்துள்ளோம்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். ஒருவரை நாம் எவ்வித வார்த்தைகள் கொண்டு அழைக்கிறோம் என்பதிலேயே, அவரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் மதிப்பு, அல்லது, அவமதிப்பு ஆகியவை தெளிவாகத் தெரிந்துவிடும். உள்ளத்தின் நிறைவிலிருந்து உருவாவதே, வாய் வார்த்தைகள்! அதேபோல், தவறான சொற்களை நாம் பயன்படுத்துவதால், அந்த சொற்களுடன் இணைந்த தவறான எண்ணங்கள், நம் உள்ளங்களை நிறைத்துவிடும் ஆபத்தும் உண்டு. ஒருவரைக் குஷ்டரோகி என்று சொல்வதற்குப் பதில், அவர் ஒரு நோயாளர் என்று சொல்லும்போதே, அவரைப் பற்றிய நமது எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபடும். அவரைப்பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும்.

சாதிய மடமை என்ற நோயால் துன்புறும் இந்திய சமுதாயத்தில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்கு,  பிறப்பிலேயே  முத்திரை குத்திவிடுகிறோம். இந்தியாவின் சாபக்கேடாக விளங்கும் இந்தச் சமுதாயக் குற்றத்திற்கு, இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.

முத்திரைகள் குத்தி, மக்களைப் பிரிப்பதில் யூத மதத் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். நோயுற்றோரை, இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று அவர்கள் தீர்மானித்தனர். அதிலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனிதர்களுடன் வாழத் தகுதியற்ற பெரும் பாவிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது. தொழுநோய் என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள் அனுபவிக்க வேண்டிய கொடுமைகளை, இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது.

லேவியர் நூல் 13: 1-2, 44-46

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

இஸ்ரயேல் மக்கள் தொழு நோயாளிகளை நடத்திய விதம் மிகக் கொடுமையானது. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை அடித்தவாறு வரவேண்டும். இந்த மணிசப்தம் கேட்டதும், எல்லாரும் விலகி விடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்க்கவேண்டும். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்நேரத்தில், அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில், பெரும் போராட்டம் நிகழ்ந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்தக் கோபம், வெறியாக மாறினால், கல்லால் எறியப்பட்டு, கொல்லப்படலாம். இதெல்லாம் தெரிந்திருந்தும், அந்தத் தொழுநோயாளி, இயேசுவை அணுகிச் சென்றார். அந்த நம்பிக்கையே, அவர் குணமடைந்ததற்கு முதல் படியாக அமைந்தது.

இயேசு, தூரத்தில் நின்றபடி, அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளரைத் தொட்டார். இயேசு இவ்வாறு செய்தது, சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். மதத் தலைவர்கள் தவறாகக் கற்பிக்கும் சட்டங்களால் கட்டுண்டு, மனிதர்களை, மிருகங்களிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளியின் உடலைத் தொட்டு குணமாக்கிய இயேசு, சூழ இருந்தவர்களின், மனதைத் தொட்டு, குணமாக்க முயன்றார்.

மூன்றாவது வாரமாக, இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் ஞாயிறு நற்செய்திகளில் கேட்டு வருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று, சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதையைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்குத் தேவையான முக்கிய வழி என்பதை, இன்றைய நற்செய்தியில் நாம் கற்றுக்கொள்கிறோம்.

1858ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகரில், 14 வயது நிறைந்த பெர்னதெத் சுபிரூ (Bernadette Soubirous) என்ற இளம்பெண்ணுக்கு அன்னை மரியா முதல் முறையாகத் தோன்றினார். அந்நிகழ்வின் 160ம் ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம். கடந்த 160 ஆண்டுகளாக, தன்னை நாடிவந்துள்ள பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தரும் லூர்துநகர் அன்னை வழியே, நாம் அனைவரும், குறிப்பாக, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், நலம் பெற்று வாழ, இறையருளை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.