2018-02-14 16:44:00

இந்தியாவின் 31 முதல்வர்களைப் பற்றிய சில விவரங்கள்


பிப்.14,2018. குடியரசில் சீர்திருத்தங்களை உருவாக்கும் கழகம் என்று பொருள்படும் The Association for Democratic Reforms (ADR) என்ற அமைப்பும், தேசிய தேர்தல் விழிப்புணர்வு, National Election Watch (NEW) என்ற அமைப்பும் இணைந்து, இந்தியாவின் தற்போதைய முதலமைச்சர்கள் குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள், அதிக சொத்துகள் கொண்ட முதல்வராக முதலிடத்திலும், கடைசி இடத்தில், திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் அவர்களும் இருக்கின்றனர்.

அதிக சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்களில் சந்திரபாபு நாயுடு அவர்களைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு அவர்கள், இரண்டாவது இடத்திலும், பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் அவர்கள், மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதுபோலவே குறைவான சொத்துகள் கொண்டவர்களில், மாணிக் சர்க்காருக்கு அடுத்தபடியாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், இரண்டாவது இடத்திலும் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி அவர்கள், மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் 31 முதல்வர்களில், 25 முதல்வர்கள் கோடீஸ்வர்கள் என்பதும், இவர்களில் இருவரின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேற்பட்டதென்றும் இவ்வறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.

மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் 26 விழுக்காட்டு முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட மிக கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கல்வியறிவைப் பொருத்தவரை 10 விழுக்காட்டு முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 விழுக்காட்டினர் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், 16 விழுக்காட்டினர் முதுநிலை பட்டதாரிகளாகவும், உள்ளனர்.

சிக்கிம் மாநில முதல்வர், Pawan Kumar Chamling அவர்கள் மட்டுமே, முனைவர் பட்டம் பெற்றவர். 

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.