2018-02-15 15:25:00

கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் வழங்கிய தவக்காலச் செய்தி


பிப்.15,2018. ஆன்மீகச் செல்வங்களை அடைவதற்கும், உண்ணாநோன்பு மற்றும் இரக்கச்செயல்கள் ஆற்றுவதற்கும் தவக்காலம் தகுந்ததொரு காலமாக அமையவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள், தன் தவக்காலச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

பிப்ரவரி 14, இப்புதனன்று, மும்பையின் கொலாபாவில் அமைந்துள்ள புனித நாமம் பேராலயத்தில் திருநீற்றுப் புதன் திருப்பலியை தலைமையேற்று நடத்திய மும்பைப் பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே, தவக்காலம், கூடுதல் பொருளுள்ளதாக அமையும் என்று கூறினார்.

வறியோருக்கு உணவளித்தல், பிறரன்பு நிறுவனங்களில் தன்னார்வத் தொண்டு புரிதல், நோயுற்றோரையும், தனித்து விடப்பட்ட முதியோரையும் சந்தித்தல், மற்றும் இரத்த தானம் செய்தல் போன்ற செயல்கள், தவக்காலத்தின் தனிப்பட்ட முயற்சிகளாக அமையவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

போலி இறைவாக்கினர்களின் வழிநடத்துதல் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தவக்காலச் செய்தியில், எச்சரிக்கை விடுத்துள்ளதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், உலகம் கூறிவரும் ஆலோசனைகள், நம் உள்ளத்தில், இரக்கம், பரிவு, ஆகிய நற்பண்புகளை குறைத்து விடுகின்றன என்று, சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.