2018-02-22 15:21:00

33வது உலக இளையோர் நாளுக்கு திருத்தந்தையின் செய்தி


பிப்.22,2018. மார்ச் 25, குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 33வது உலக இளையோர் நாளுக்கென, லூக்கா நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1:30) என்ற சொற்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

2018ம் ஆண்டு கொண்டாடப்படும் உலக இளையோர் நாள், இவ்வாண்டு வத்திக்கானில் கூடிவரும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கும், 2019ம் ஆண்டு, சனவரி மாதம் பானமா நாட்டில் நிகழவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கும் தகுந்த தயாரிப்பாக அமைகிறது என்று, திருத்தந்தை தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"அஞ்சவேண்டாம்", "மரியா", "கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" "இன்றைய தருணத்தில் துணிவு" என்ற நான்கு பகுதிகளாக தன் செய்தியை உருவாக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் பகுதியில், இளையோர் எதிர்கொள்ளும் அச்சங்களைக் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அச்சம் என்ற மனித அனுபவத்தை விவிலியத்தில் அடிக்கடி காணமுடிகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, ஆபிரகாம், யாக்கோபு, மோசே, திருத்தூதர் பேதுரு, ஆகியோர் அடைந்த அச்சத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இயேசுவே அச்சமும், வேதனையும் அடைந்தார் என்பதையும் (மத். 26:37; லூக். 22:44) குறிப்பிட்டுள்ளார்.

நம் நம்பிக்கைக்குத் தடையாக இருப்பது, சந்தேக உணர்வு அல்ல, மாறாக அச்சமே என்று கூறியுள்ளத் திருத்தந்தை, புயலைக் கண்டு அச்சம் கொண்ட சீடர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற்கு 4:40) என்று இயேசு கூறியதை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்.

அச்சத்தை வெல்வதற்கு, இறைவனிடமும், ஒருவர் ஒருவரிடமும் உரையாடுவது சிறந்த வழி என்று கூறியுள்ள திருத்தந்தை, மனதைத் திறந்து, இறைவனோடும், மற்றவரோடும் உறவு கொள்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் பண்பு என்று எடுத்துரைத்துள்ளார்.

வானதூதர், 'மரியே' என்று இளம்பெண்ணை பெயர் சொல்லி அழைத்ததை இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒருவரை பெயரிட்டு அழைப்பது, தனிப்பட்ட ஒரு பணிக்கென அவரை அழைப்பதற்குச் சமம் என்பதை, விவிலியத்தில் அடிக்கடி நாம் காண முடியும் என்று கூறியுள்ளார்.

இளம்பெண் மரியா அஞ்சாமல் இருப்பதற்கு வானதூதர் சொல்லும் ஒரு முக்கிய காரணம், அவர் 'கடவுளின் அருளைப் பெற்றவர்' என்பதே என்று தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீடர்கள் அனைவரும் தங்கள் இயலா தன்மையை உணர்ந்திருந்தாலும், இறைவனின் அருள் உள்ளது என்ற நம்பிக்கையில் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர் என்று எடுத்துரைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.