2018-03-10 14:52:00

திருத்தந்தை : நீங்கள் இரக்கத்தின் சாட்சிகளாக மாற முடியும்


மார்ச்,10,2018. அக்கறையற்ற மனநிலையுடன் பிறரை நோக்காத, அல்லது மனிதரின் துன்பங்களைப் பார்க்கும்போது முகத்தைத் திருப்பாத, பிறரைச் சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டு குழு ஒன்றிடம் கேட்டுக்கொண்டார்.

“Fontaine de la Misericorde” எனப்படும், இரக்கத்தின் ஊற்று அறக்கட்டளையின் ஏறத்தாழ 51 உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து, உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறப்பு உணர்வுடன் வாழ்கின்ற, இரக்கத்தின் கலாச்சாரத்தில், தூய ஆவியாரின் உதவியுடன், வளருமாறு கேட்டுக்கொண்டார்.

இறைவேண்டல் கல்விக்கூடம் மற்றும் சகோதரத்துவ பயிற்சி வழியாக, எல்லா மக்களையும் வரவேற்று உதவுகின்ற, இந்த அறக்கட்டளையின் பணிகளைப் பாராட்டிய  திருத்தந்தை, நம் ஆண்டவர், தம் இரக்கத்தை அனுபவிப்பதற்கும், அன்றாட வாழ்வில் அந்த இரக்கச்செயல்களை ஆற்றவும் வழிநடத்துவதற்கு, உங்களோடு சேர்ந்து நானும் நன்றி சொல்கிறேன் என்று கூறினார்.

இறைவேண்டலில், ஆண்டவரின் இதயத்தோடு நம் இதயம் சந்திக்கின்றது எனவும், அவரின் இரக்கத்தின் உயிருள்ள தண்ணீரில் ஒவ்வொரு நாளும் மீண்டும் பிறப்பதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள இறைவார்த்தையை, அதில் கேட்கின்றோம் எனவும் கூறியத் திருத்தந்தை, இறைவேண்டலில் தொடர்ந்து இடைவிடாமல் நிலைத்திருக்கவும் வலியுறுத்தினார்.

இரக்கத்தின் ஊற்று அறக்கட்டளையின் உறுப்பினர்களை, அன்னை மரியிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Fontaine de la Misericorde அறக்கட்டளை, 1991ம் ஆண்டில் ஜெனீவா நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.