2018-03-17 14:26:00

தவக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


இயற்கையில் இடம்பெறும் நான்கு பருவக்காலங்களில், வசந்த காலத்திற்குத் தனியொரு மந்திரசக்தி உண்டு. பனியில் புதைந்து, இறந்துபோனதுபோல் தோன்றும் தாவர உயிர்கள், வசந்தம் வந்ததும், மீண்டும் உயிர் பெற்று எழுவது, இயற்கை நமக்குச் சொல்லித்தரும் நம்பிக்கை பாடம். இந்த நம்பிக்கைப் பாடத்தைப் பயில, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ம் தேதியையொட்டி வசந்தகாலம் வரும். ஆனால், இந்தியாவில், குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில், அதிலும் குறிப்பாக, மும்பை மாநகரில் மார்ச் 11, 12 ஆகிய நாட்களில் வசந்தம் வந்தது. ஏறத்தாழ 50,000 விவசாயிகள் கொண்டுவந்த வசந்தம் அது. நாசிக் நகரிலிருந்து நடைப்பயணமாகப் புறப்பட்ட விவசாயிகள், மார்ச் 11, சென்ற ஞாயிறன்று, மும்பை நகரில் நுழைந்தனர். இவர்களின் எழுச்சியைக் கண்டு, மகாராஷ்டிர அரசு பணிந்தது. விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவு செய்வதாக வாக்களித்துள்ளது.

வாழ வழியின்றி, வலுவற்ற நிலையில் இருந்த விவசாயிகள், வலிமை மிகுந்த மாநில அரசை பணியவைத்த இந்த போராட்டம், மார்ச் 12ம் தேதி நிறைவடைந்தது. அந்த நாள், 88 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மற்றொரு போராட்டத்தை நினைவுக்குக் கொணர்ந்தது. ஆம், 1930ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் துவக்கினார். வலிமை மிகுந்த ஆங்கிலேய அரசுக்கு எதிராக, அகிம்சை வழியே துவங்கிய அந்தப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்ற பல எழுச்சிகளுக்கு வித்திட்டது. காந்தியடிகள் காட்டிய வன்முறையற்ற போராட்டத்தின் சக்தியை, மீண்டும் இவ்வாண்டு, இந்திய விவசாயிகள் இவ்வுலகிற்கு உணர்த்தியுள்ளனர். மார்ச் மாதம் நிகழ்ந்த இவ்விரு போராட்டங்களும் மக்களுக்கு நன்மை தரும் மாற்றங்களை உருவாக்கின. மாற்றங்களைக் கொணரும் வசந்த காலமும், மக்களுக்கு நன்மைகளைக் கொணரும் தவக்காலமும், மார்ச் மாதத்தில் இணைந்து வருவது, இறைவன் வழங்கும் கொடை.

தவக்காலத்திற்கும், வசந்தக்காலத்திற்கும் இடையே உள்ள நெருங்கியத் தொடர்பை, நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று சிந்தித்தோம். தவக்காலத்தின் 5ம் ஞாயிறான இன்று, வசந்தக்காலத்தைப்பற்றி, மீண்டும் ஒருமுறை சிந்திக்க வந்திருக்கிறோம். தாவர உலகம் மடிந்து, மீண்டும் உயிர்பெற்றெழும் வசந்த காலத்தை நினைவுறுத்தும் வகையில், அழகான ஒரு கூற்றை, இறைமகன் இயேசு, இந்த ஞாயிறன்று, நமக்கு முன் வைக்கிறார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 12: 24) சவால்கள் நிறைந்த இந்தக் கூற்றை இயேசு கூறியச் சூழலைப் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். (யோவான் 12: 20-21) என்ற சொற்களில், நற்செய்தியாளர் யோவான் இச்சூழலை பதிவு செய்துள்ளார்.

ஆர்வமாக, ஆவலாக, தன்னைக் காண வந்த கிரேக்க நாட்டவரை, இயேசு வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறும் வார்த்தைகள், கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன. எருசலேமுக்கு கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் ஏன் இயேசுவை காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு முனாச்சி என்ற அருள்பணியாளர் (Fr Munachi E. Ezeogu) தன் மறையுரையில் தரும் விளக்கம் புதிதாக உள்ளது... புதிராகவும் உள்ளது.

கிரேக்கர்கள் உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை சாக்ரடீசை கொன்றது பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர் பின்பற்றும் கொள்கைகளுக்காகவோ, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்காகவோ கொல்வதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள் கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில் பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழமுடிந்தது, பேசமுடிந்தது. தங்கள் நாட்டு சிந்தனைகள் போதாதென்று, பல கிரேக்கர்கள், அண்டை நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கிக் கொண்டனர். சுதந்திரச் சிந்தனை கொண்ட கிரேக்கர்களில் ஒரு சிலர், இயேசுவைத் தேடி, எருசலேம் நகருக்கு வந்தனர்.

எருசலேமில் அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர். இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக அந்நகரில் உருவாகியிருந்த எதிர்ப்பும், வெறுப்பும் கிரேக்கர்களை அதிர்ச்சியடையச் செய்தன. எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச்சொல்லி, சிந்தனைச் சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு தங்களுடன் வரும்படி அவரை அழைத்திருக்க வேண்டும். அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, ‘தன்னுடைய நேரம் வந்துவிட்டது’ என்று பேச ஆரம்பிக்கிறார்.

ஊருக்குப் புதிதாய் வந்த வேற்று நாட்டினரே இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப் போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர் முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை, இன்றைய நற்செய்தியில், பல விதங்களில் கூறியுள்ளார் இயேசு.

இயேசு சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. (யோவான் 12:23) யோவான் நற்செய்தியில் "நேரம் வரவில்லை" என்ற வார்த்தைகள் மும்முறை சொல்லப்பட்டுள்ளன. கானாவில் நடந்த திருமணத்தின்போது மரியா அவரிடம் 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்று சொன்னதும், இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” (யோவான் 2:3-4) என்று முதல் முறையாகச் சொல்கிறார். மீண்டும் யோவான் நற்செய்தியில் இரு இடங்களில் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. (யோவான் 7:30) அவரைப் பிடிக்கவில்லை. (யோவான் 8:20) என்று வாசிக்கிறோம். தன் நேரம் இன்னும் வரவில்லை என்று அதுவரை உணர்ந்திருந்த இயேசு, இன்று, தன் ‘நேரம் வந்துவிட்டது’ என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து, அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை, மேலும் புதிராக உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய வார்த்தைகள், காலம் காலமாக, பலருடைய உள்ளங்களில், குறிப்பாக, மறைசாட்சிகளின் உள்ளங்களில், உறுதியை, வீரத்தை விதைத்துள்ள வார்த்தைகள்:

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 12: 24)

கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு, முக்கியமான இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, அது, மாவாக அரைபட்டு, உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்கவேண்டும். அல்லது, அது, விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்கவேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி, தன் சுய உருவை, உயிரை இழக்கவேண்டும்.

கோதுமை மணி, மாவாக அரைபட்டு, அப்பமாக மாறுவதை, மறைசாட்சியாக உயிர் துறந்த புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் அழகாகக் கூறியுள்ளார். தான் சிங்கங்களுக்கு உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்த அவர் சொன்ன வார்த்தைகள் இவை: "இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அரைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காக படைக்கப்பட்ட கோதுமை மணி நான்." (I am God's wheat, ground fine by the lion's teeth to be made purest bread for Christ.)

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரைப் போல, பல்லாயிரம் மறைசாட்சிகள், மரணம் வரை உறுதியாக நிலைத்திருக்க இந்த இறை வாக்கியம் தூண்டுதலாக இருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தன்னை இழந்து, மற்றவரை வாழ்விப்பது, கோதுமை மணிகளுக்கு மட்டுமல்ல; அனைத்து உயிரினங்களுக்கும், சிறப்பாக, மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய இலக்கு. மண்ணில் விழும் விதைகளாக மாற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சிந்திக்கும்போது, ஓர் உவமை நம் நினைவில் தோன்றுகிறது.

உலக அமைதி எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்தனர், ஓர் இளைஞனும், இளம் பெண்ணும். ஆனால், இவ்வுலகம், ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறதே என்ற விரக்தியினால் மன அமைதியை இழந்து தவித்தனர். இருவரும் ஒருநாள், ஒரு கடைக்குச் சென்றனர். அந்தக் கடை சற்று வித்தியாசமானதாக இருந்தது. கடையின் உரிமையாளர் இயேசு என்பதை இருவரும் உணர்ந்து, அவரிடம் சென்று, "இங்கு நீங்கள் என்ன விற்கிறீர்கள்?" என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், "உங்களுக்கு விருப்பமான அனைத்தும் இங்கு உள்ளன. நீங்கள் கடையைச் சுற்றிப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றைக் குறித்துக்கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

இளைஞனும், இளம்பெண்ணும் கடை முழுவதும் சுற்றினர். அவர்கள் விரும்பித்தேடிய பல பொருள்கள் அங்கிருந்தன. அமைதியான உலகம், பசியில்லாத பூமி, போரற்ற சமுதாயம், சுத்தமான காற்று, தெளிந்த நீர், அன்பு நிறைந்த குடும்பம் என்று அவர்கள் ஏங்கித்தவித்த அனைத்தும் அந்தக் கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தாங்கள் அதுவரை வாழ்வில் தேடிவந்த அனைத்தும் தங்களுக்கு உடனே கிடைத்துவிடும் என்ற ஆவலில், அக்கடையில் இருந்த அனைத்து நலன்களையும் குறித்துக்கொண்டு, இருவரும் இயேசுவிடம் திரும்பிச்சென்றனர்.

அவர்கள் தந்த பட்டியலைக் கண்ட இயேசு, புன்னகையோடு ஒரு சில பொட்டலங்களை அவர்களிடம் தந்தார். "இவை என்ன?" என்று அவர்கள் கேட்டபோது, இயேசு, "இவை அனைத்தும் விதைகள்" என்று சொன்னார். புரியாமல் அவரைப் பார்த்த இருவரிடமும் இயேசு, "இது கனவுகளின் கடை. நீங்கள் குறித்து வந்த கனவுகள் அனைத்திற்கும் தேவையான விதைகள், இந்தப் பொட்டலங்களில் உள்ளன. இவற்றை விதைத்து, வளர்ப்பது உங்கள் பொறுப்பு" என்று இயேசு சொன்னார். தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த கனவுகள், 'ரெடிமேட்' நிலையில் கிடைக்காது, அவற்றை நட்டு வளர்ப்பது தங்கள் கடமை என்பதை இருவரும் உணர்ந்தனர்.

அவர்கள் கடையைவிட்டுக் கிளம்பும்போது, இயேசு அவர்களிடம், "ஓ, ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். இந்தக் கனவுகளை விதைப்பதும், வளர்ப்பதும் மட்டுமே உங்கள் பொறுப்பு. இவற்றின் பலன்களை அடுத்தத் தலைமுறையினரே அனுபவிக்கப் போகின்றனர்" என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

மிகத் தெளிவான, ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. 'நொடிப்பொழுது' (instant) உணவுவகைகள் உட்பட, அனைத்தும் 'ரெடிமேட்' வடிவத்தில் கிடைக்கும் இன்றைய உலகில், கனவுகள் என்ற விதைகளை நட்டு, கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதற்கு ஏராளமான பொறுமை தேவை. அத்தகையப் பொறுமை நமக்கு உள்ளதா என்பதை ஓர் ஆன்மீகச் சோதனையாக மேற்கொள்ளலாம்.

அடுத்ததாக, அன்பான, அமைதியான, உலகம் உருவாகவேண்டும் என்ற கனவு, நம் அனைவருக்கும் உண்டு. இந்தக் கனவு, 'ரெடிமேட்' சரக்காக நம்மை வந்தடையாது. கடையின் உரிமையாளர் கடவுளே என்றாலும், அவர் நம் கனவுகளை, கடைச்சரக்கைப் போல், பரிசுக் காகிதத்தில் சுற்றித் தரமாட்டார். அவர் தருவதெல்லாம் கனவு விதைகள். அந்த விதைகளை நட்டு, வளர்ப்பது நம் கடமை. நாம் நட்டு வளர்த்த விதைகளின் கனிகளை நாம் சுவைக்க முடியவில்லை என்றாலும், கனவுகளை நட்டோம், கண்ணும், கருத்துமாய் வளர்த்தோம் என்ற நிறைவுடன் இவ்வுலகிலிருந்து விடைபெறும் பக்குவத்தை, இறைவன் நமக்குத் தர வேண்டும் என்று மன்றாடுவோம்.

பலன்களை எதிர்பார்க்காமல், நல்ல கனவுகளை இவ்வுலகில் நட்டு, வளர்த்தால், நாமும், மிகுந்த விளைச்சலை அளிக்கும் கோதுமை மணிகளாக வாழ்ந்தவர்கள் என்ற பெருமை பெறுவோம். இதையே, இயேசு, ஒரு சவாலாக, இன்று நமக்கு முன் வைக்கிறார். இந்த சவாலை ஏற்று, செயல்படுத்த, தவக்காலம், தகுந்ததொரு தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.