2018-04-07 14:57:00

இறைவனின் இரக்கத்தைக் கண்டுகொள்வதற்கு உதவுங்கள்


ஏப்.07,2018. பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் அருள்பணியாளர் குழுமத்தின் ஏறத்தாழ ஐந்நூறு பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை முற்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள், இறைவனின் இரக்கத்தைக் கண்டுகொள்வதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இம்மானுவேல் என்ற இக்குழுமத்தின் பெயரே, கடவுள் நம்மோடு, அதாவது, மனித உரு எடுத்த கடவுளின் பேருண்மைகளைத் தியானிப்பதிலிருந்து பிறந்துள்ளது என்று கூறியத் திருத்தந்தை, தூய ஆவியாரில் நம்பிக்கை வைத்து, அகவாழ்வை ஆழப்படுத்துவதன் வழியாக, கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றி, அதில் நிலைத்திருக்குமாறு வலியுறுத்தினார்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்தக் குழுமம், அண்மையில் திருஅவையின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதையும், இக்குழுமத்தில் இறையழைத்தல் அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இக்குழுமத்தினர், தலத்திருஅவையில் முழுமையாய்த் தங்களை ஈடுபடுத்தி பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

திருஅவை, இக்குழுமத்தினரின் பணிகளை மிகவும் எதிர்பார்க்கின்றது என்றும், தூய ஆவியாருக்கு எப்போதும் செவிமடுத்து, அவரால் வழிநடத்தப்பட தங்களை அனுமதிக்குமாறும் கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கூறினார்.        

Pierre Goursat, Martine Laffitte-Catta ஆகிய இருவரின் ஆர்வத்தால், 1976ம் ஆண்டில், பாரிசில் இம்மானுவேல் குழுமம் தோற்றுவிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.