2018-04-17 16:18:00

கருக்கலைத்தல் என்பது கொலைக்கு ஈடாகும் - கர்தினால் இரஞ்சித்


ஏப்.17,2018. வானகத் தோட்டத்தில் மலர்கள்போல் இருக்கும் குழந்தைகளை, கருவிலேயே அழிக்க எவருக்கும் உரிமையில்லை, கருக்கலைத்தல் என்பது கொலைக்கு ஈடாகும் என்று, இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

அருள்பணியாளருக்கும், கத்தோலிக்க பொதுநிலையினருக்கும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு மடலில், இறைவன் வழங்கும் குழந்தைச் செல்வம் எவ்வளவு உன்னதமானது என்பதை, திருமணமான தம்பதியரும், திருமணம் புரியவிருக்கும் தம்பதியரும் உணரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் தங்கள் கருவைக் கலைத்துவிட்டு, அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் பெண்களுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம் என்ற சிறப்பு அனுமதியை, அருள்பணியாளருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளதை வைத்து, கருக்கலைத்தலை அவர் அனுமதிக்கிறார் என்ற தவறான அர்த்தத்தைத் தரக்கூடாது என்று கர்தினால் இரஞ்சித் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருக்கலைத்தல் என்பது, பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்வதாகும் என்ற செய்தி மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள், தன் மடலில் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்படி கருக்கலைத்தல் தடைசெய்யப்பட்டுள்ள இலங்கையில், ஒவ்வொரு நாளும், 658 சட்ட விரோத கருக்கலைத்தல்கள் இடம்பெறுகின்றன என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.