2018-04-23 14:56:00

இமயமாகும் இளமை – எவரெஸ்டில் செயற்கை காலுடன் காலூன்றியவர்


22 வயது நிரம்பிய இளைஞர் ஜாரா அல்ஹாவாம்தே (Jarah Alhawamdeh) அவர்கள், உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில், செயற்கை காலுடன், காலூன்றிய முதல் பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தவர். இவர், தனது 15வது வயதில் புற்று நோயால், வலது காலை இழந்தவர் மற்றும், ஜோர்டன் நாட்டின் அம்மானுக்கு அருகில், Al Jofeh பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தவர் முகாமில் வாழ்ந்து வருபவர். இம்முகாமில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் ஜாரா. இவர், தான் பிறந்து வளர்ந்து வரும் புலம்பெயர்ந்தவர் முகாமுக்கும், அம்முகாமில், கடந்த பத்து ஆண்டுகளாக, தான் படித்துவரும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற இலட்சியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆப்ரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்ஜாரோ மலையில், 2015ம் ஆண்டில் ஏறி சாதனை படைத்தார் ஜாரா. டான்சானியா நாட்டிலுள்ள இம்மலை, 5,895 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த வாரத்தில், எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்துள்ள இளைஞர் ஜாரா அவர்கள், இந்தச் சாதனை பற்றிச் சொல்கிறார்... எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டுமென்பது, எனது நெடுநாளைய கனவு. ஏப்ரல் 2ம் தேதி, நாங்கள் 11 பேர் மலையேறத் தொடங்கினோம். ஆனால் சிகரத்தைத் தொட்டவர்கள் நானும், இன்னொருவரும் மட்டும்தான். சிகரத்தை எட்டுவதற்கு முந்தைய கடைசி மூன்று நாள்கள் மூச்சு விடுவதற்கே கடினமாக இருந்தது. மைனஸ் 30 டிகிரி செல்சியுஸ் குளிர் வாட்டியது. அப்போதெல்லாம், எனது புலம்பெயர்ந்த பள்ளி மாணவர்களும், முகாமுமே நினைவுக்கு வந்தன. பதினைந்தாவது வயதில், எலும்பு புற்று நோயால் தாக்கப்பட்டேன். அதனால் ஒரு காலை இழந்தேன். முடியாதது என்று எதுவுமே இல்லை என்ற நம்பிக்கையை, புற்றுநோயாளர்களுக்குக் காட்ட விரும்புகிறேன். பாலஸ்தீனியர்கள், கல்வி கற்றவர்கள், வெற்றியாளர்கள் மற்றும், ஏனைய மனிதர்களைப்போல, நல்லதொரு வாழ்வு வாழத் தகுதியுள்ளவர்கள் என்பதை, உலகிற்கு நான் காட்ட விழைகின்றேன்.

முடியாதது என்று எதுவும் இல்லை என, மலையேற்றத்தில், சாதித்துக் கொண்டிருக்கும் இளைஞர் Jarah அவர்களின் இலட்சியங்கள் நிறைவேறட்டும்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.