2018-04-24 16:05:00

டொரான்டோ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாடு


ஏப்.24,2018. கனடா நாட்டின் டொரான்டோவில் இத்திங்கள் இரவில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகச் செபிக்குமாறு, தனது உயர்மறைமாவட்ட கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், டொரொன்டோ பேராயரான கர்தினால் தாமஸ் கோலின்ஸ்.

டொரான்டோவில், மக்கள் அதிகமாகக் குழுமியிருந்த நிலையில், அவர்கள் நடுவே, எதிர்பாராத விதமாக வேன் ஒன்று நுழைந்ததில், பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

டொரான்டோ உயர்மறைமாவட்டத்தின் 225 கத்தோலிக்க ஆலயங்களிலும், இத்தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகச் செபிக்குமாறும்,  வேதனையில் இருப்போருக்கு ஆறுதலளிக்குமாறும் கூறியுள்ளார், கர்தினால் கோலின்ஸ்.

25 வயது நிரம்பிய Alek Minassian என்பவர் ஓட்டி வந்த இந்த வேன், நடைபாதையில் சென்ற மக்களை, இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.