2018-05-21 16:08:00

திருப்பீடத் துறைகளின் தலைவர்களுடன் திருத்தந்தை கூட்டம்


மே,21,2018. “கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் உலகிற்கு வழங்கும் மக்கள் அவருக்குத் தேவைப்படுகின்றனர்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இத்திங்களன்று வெளியாயின.

மேலும், திருப்பீடத் துறைகளின் தலைவர்களை, இத்திங்கள் காலையில் வத்திக்கானிலுள்ள பொலோஞ்ஞா அறையில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்கள் மாலையில், இத்தாலிய ஆயர் பேரவையினரை, உலக மாமன்ற அறையில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜிம்பாபுவே நாட்டிற்குத் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வந்த பேராயர் Marek Zalewski அவர்களை, சிங்கப்பூர் நாட்டிற்குத் திருப்பீடத் தூதராகவும், வியட்நாம் நாட்டிற்கு அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகவும், இத்திங்களன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். போலந்து நாட்டைச் சேர்ந்த இவர், 1963ம் ஆண்டில் பிறந்தவர்.

மேலும், தூய ஆவியார் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், மத்திய கிழக்குப் பகுதி மற்றும் வெனெசுவேலா நாட்டிற்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெந்தக்கோஸ்து, எருசலேமின் இதயத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றது எனவும், எருசலேமில் அமைதிக்காக நடத்தப்பட்ட செப வழிபாட்டில், ஆன்மீக முறையில் தான் கலந்துகொண்டதாகவும் கூறி, புனித பூமியிலும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் உரையாடலும், ஒப்புரவும் இடம்பெறுவதற்குரிய ஆவலைத் தூய ஆவியார் தூண்டுமாறு செபிப்போம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்  

எனதன்புமிக்க வெனெசுவேலாவில், மக்கள் அமைதியும் ஒன்றிப்பும் நிறைந்த பாதையைக் கண்டுகொள்வதற்கு, தூய ஆவியார், அனைவருக்கும் ஞானத்தை அருளுமாறு செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நாட்டில் எதிர்க்கட்சியினர் ஏராளமாக அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் கலவரங்கள் ஏற்பட்ட ஓரிரு நாள்களில், அந்நாட்டின் மற்றொரு சிறையில், இச்சனிக்கிழமை இரவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.