2018-05-22 14:52:00

டப்ளின் உலக குடும்பங்கள் சந்திப்பு : பரிபூரண பலன்கள்


மே,22,2018. கிறிஸ்தவ வாழ்வு, இயேசுவில் வேரூன்றியிருக்க வேண்டும் மற்றும் பிறருக்காக வாழ வேண்டும் என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை, அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடைபெறும் 9வது உலக குடும்பங்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் விசுவாசிகளுக்கு, பரிபூரண பலன்களை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்போஸ்தலிக்க பாவமன்னிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதன்படி, இக்குடும்பங்கள் சந்திப்பில், ஏதாவது சில நிகழ்வுகளிலும், திருத்தந்தை கலந்துகொள்ளும் இறுதி நிறைவு நிகழ்விலும், பாவங்களை முழுவதும் விலக்கும் உணர்வுடன் கலந்துகொள்பவர்களுக்குப் பரிபூரண பலன்கள் உண்டு.

ஒப்புரவு அருளடையாளத்திலும், திருப்பலியிலும் பங்கெடுத்து திருநற்கருணை வாங்கி, திருத்தந்தையின் கருத்துக்களுக்காக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்பது, பரிபூரண பலன்களைப் பெறுவதற்குரிய நிபந்தனைகளாகும்.

இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள இயலாதவர்களும், குறிப்பாக, திருத்தந்தையின் செய்திகளை, வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாகக் கேட்பவர்களும், இதே நிபந்தனைகளுடன் பரிபூரணபலன்களைப் பெறலாம். அத்தகையவர்கள், டப்ளினில் இடம்பெறும் நிகழ்வுகளில் மனத்தளவிலும், எண்ணத்தளவிலும் கலந்துகொண்டு, குடும்பமாகச் சேர்ந்து, இறைவனின் இரக்கத்தை இறைஞ்சி, வானகத்தந்தையே என்ற செபம், விசுவாச அறிக்கை மற்றும் பிற செபங்களைப் பக்தியோடு சொல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9வது உலக குடும்பங்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, தற்போது 103 நாடுகளிலிருந்து ஏறத்தாழ 22 ஆயிரம் பேர் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 28 விழுக்காட்டினர் 18 வயதுக்குட்பட்ட இளையோர். மேலும், 3,500 தன்னார்வலர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர் எனச் சொல்லப்பட்டுள்ளது.

இன்னும், Centesimus Annus பாப்பிறை நிறுவனம் தொடங்கப்பட்டதன் 25ம் ஆண்டையொட்டி, புதிய அரசியல் மற்றும் டிஜிட்டல் உலகில் வாழ்வுமுறை என்ற தலைப்பில், வத்திக்கானில், மே 24, வருகிற வியாழன் முதல், மே 26, வருகிற சனிக்கிழமை வரை பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.

Centesimus Annus - Pro Pontifice என்ற பாப்பிறை நிறுவனம், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1991ம் ஆண்டு மே முதல் தேதியன்று வெளியிட்ட, Centesimus Annus அதாவது, நூறாவது ஆண்டில் என்ற திருமடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

உலகளாவிய சமுதாயத்தில், கிறிஸ்தவ சமூகக் கோட்பாடுகள் பரவுவதை, இந்நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன், Centesimus Annus - Pro Pontifice நிறுவனம் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.