2018-06-08 16:44:00

அமேசான் பகுதி சிறப்பு ஆயர் மாமன்ற தயாரிப்பு வரைவு


ஜூன்,08,2018. ‘திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலுக்கும் புதிய பாதைகள்’ என்ற தலைப்பில், 2019ம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும், அமேசான் பகுதி ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்குரிய தயாரிப்பு ஏட்டை, இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

அமேசான் பகுதியில் வாழ்கின்ற பூர்வீக இன மக்கள் மற்றும் அனைத்துச் சமூகங்களுக்குச் செவிமடுப்பது, உலகளாவிய திருஅவைக்கு முக்கியமானது என்றுரைக்கும் இந்த ஏடு, இந்த மாமன்றம், உலகளாவிய திருஅவை மற்றும் இந்த பூமிக்கோளத்தின் வருங்காலத்தைக் கவனத்தில் கொண்டு செயல்படவிருப்பதால், இது, முழுவதும் அமேசான் பகுதி திருஅவையைச் சார்ந்து நடைபெறுவது என்று தெரிவிக்கின்றது.

வீணாக்கும் கலாச்சாரம், தவறாகப் பயன்படுத்தப்படும் மக்கள், திருஅவையின் அமேசான் முகம் ஆகிய மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பு ஏடு, அமேசான் பருவமழைக் காடுகள், இப்புவியின் நுரையீரல் மற்றும் உலகில் பல்வகை உயிரினங்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதி எனவும் கூறுகின்றது.

மனிதரின் தொடர்ந்த ஊடுருவல்கள் மற்றும், வீணாக்கும் கலாச்சாரத்தால் அமேசான் பகுதி மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்றும், வளமான பல்வகை உயிரினங்கள், பல இன, பல கலாச்சார மற்றும் பல மதப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள இப்பகுதி, அனைத்து மனித சமுதாயத்தின் கண்ணாடி என்றும், இந்த ஏடு கூறுகின்றது.

மத்திய ஆப்ரிக்காவிலுள்ள காங்கோ பருவமழைக் காடுகள் பகுதி, வடக்கு மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடையிலுள்ள, உலகின் பத்து விழுக்காட்டு உயிரினங்களைக் கொண்ட Mesoamerican பகுதி, ஆசிய-பசிபிக் பகுதியிலுள்ள பருவமழைக்காடுகள் பகுதி போன்ற உலகின் ஏனைய உயிரின வளங்களைக்கொண்ட பகுதிகளுக்கும், அமேசானுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தவும் இந்த மாமன்றம் முயற்சிக்கும் எனவும் இந்த ஏடு தெரிவிக்கின்றது.   

கட்டுப்பாடின்றி மரங்கள் வெட்டப்படுதல், தண்ணீர் மாசடைதல், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவை, அமேசான் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்றும், அப்பகுதி மக்கள், நகர்ப்புறப் பகுதிகளில் குடியேறும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவ்வேடு கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.