2018-06-09 15:34:00

அஸ்தானாவுக்கு திருத்தந்தைக்கு அழைப்பு


ஜூன்,09,2018. கஜகிஸ்தான் நாட்டின் அஸ்தானாவில், வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலகப் பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்,  அந்நாட்டு அரசுத்தலைவர், Nursultan Nazarbayev.

கஜகிஸ்தான் குடியரசின் நாடாளுமன்ற செனட் அவையின் சபாநாயகர் Kasym-Zhomart Tokayev அவர்கள், இந்த அழைப்பிதழ் கடிதத்தை, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் ஆறாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, கர்தினால் பரோலின் அவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என பீதேஸ் செய்தி கூறுகின்றது.

பாதுகாப்பான உலகிற்கு சமயத் தலைவர்கள் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் அஸ்தானாவில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

கஜகிஸ்தானில், உலக மற்றும் தேசிய பாரம்பரிய மதங்களின் முதல் மாநாடு, 2003ம் ஆண்டு செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 

2002ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இத்தாலியின் அசிசியில், உலக அமைதிக்காக, உலக மதங்களின் தலைவர்களுடன் நடத்திய செப நிகழ்வால் தூண்டுதல் பெற்று, கஜகிஸ்தான் அரசுத்தலைவர் தனது நாட்டில் இம்மாநாடுகளை நடத்தி வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.