2018-06-11 16:39:00

அயர்லாந்து திருத்தூதுப்பயண விவரங்கள்


ஜூன்,11,2018. வருகிற ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரு நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயர்லாந்து நாட்டுத் தலைநகர் டப்ளின் நகருக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் பற்றிய விவரங்களை, இத்திங்களன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

டப்ளினில் நடைபெறவிருக்கும் உலக குடும்பங்கள் சந்திப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கென, வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி காலை 8.15 மணிக்கு, உரோம்   Fiumicino பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து டப்ளின் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, அன்று காலை 10.30 மணிக்கு டப்ளின் சென்று சேர்வார்.

டப்ளின் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து அயர்லாந்து அரசுத்தலைவர் இல்லம் செல்லும் திருத்தந்தை, அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றபின், அரசுத்தலைவரை மரியாதையின்பேரில் சந்திப்பார். 12.10 மணிக்கு டப்ளின் அரண்மனையில், அரசு, தூதரக மற்றும் பொதுமக்கள் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றுதல், மாலை 3.30 மணிக்கு டப்ளின் அன்னை மரியா பேராலயம் செல்தல், மாலை 4.30 மணிக்கு வீடற்ற குடும்பங்களை வரவேற்கும் மையத்தைப் பார்வையிடல், இரவு 7.45 மணிக்கு, Croke பூங்கா அரங்கத்தில் குடும்பங்கள் விழாவில் கலந்துகொள்ளல் ஆகியவை, திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகளாகும்.

ஆகஸ்ட் 26ம் தேதி ஞாயிறன்று, காலை 8.40 மணிக்கு Knock  நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, 9.45 மணிக்கு Knock அன்னை மரியா திருத்தலத்தில் செபிப்பார். பின்னர் மீண்டும் டப்ளின் சென்று, மாலை 3 மணிக்கு Phoenix பூங்காவில் உலக குடும்ப மாநாடு நிறைவு திருப்பலியை நிறைவேற்றுவார்.  பின்னர் அயர்லாந்து ஆயர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, ஆக்ஸ்ட் 26, ஞாயிறு மாலை 6.45 மணிக்கு டப்ளின் நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்பட்டு, அன்று இரவு 11 மணிக்கு, உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1979ம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட பின்னர், 2018ம் ஆண்டு ஆகஸ்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.