2018-06-13 16:27:00

திருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு


ஜூன்,13,2018. இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, புதன் பொதுமறைக்கல்வியுரை வழங்குவதற்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில், திருப்பீட வரலாற்று அறிவியல் குழு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறக்குறைய முப்பது பிரதிநிதிகளைச் சந்தித்து வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட வரலாற்று அறிவியல் குழு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால், 1954ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உருவாக்கப்பட்டது.

இன்னும், செபத்திலும், இறைவார்த்தைக்குச் செவிமடுப்பதிலும், திருநற்கருணை வாங்குவதிலும் இயேசுவைச் சந்திப்பதற்கு ஒருபோதும் தளர்வடையாதீர்கள் என்ற வார்த்தைகளை, இப்புதனன்று, தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C9 எனப்படும் கர்தினால்கள் அவையின் 25வது கூட்டம் ஜூன் 11 இத்திங்கள் முதல், ஜூன் 13, இப்புதன் வரை வத்திக்கானில் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள், Praedicate Evangelium எனத் தலைப்பிடப்பட்டுள்ள திருப்பீட தலைமையகத்தின் திருத்தூது கொள்கை விளக்கம் பற்றி அதிகமாக கலந்துரையாடல் நடைபெற்றது எனத் தெரிவித்தார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக திருப்பீடத்தில் இடம்பெற்றுள்ள சீர்திருத்தங்கள் பற்றியும் இந்நாள்களில் அந்த அவையினர் சீர்தூக்கிப் பார்த்தனர் எனவும், Burke அவர்கள் அறிவித்தார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.