2018-06-30 15:50:00

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக ஆயர்கள் எதிர்ப்பு


ஜூன்,30,2018. தமிழகத்தின், சேலம் - சென்னை இடையே அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பசுமை வழிச்சாலையை எதிர்த்து மக்கள் போராடி வருவதை, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘தமிழக அரசே, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தைக் கைவிடுக’ என்ற தலைப்பில், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் வாழ்வை அழித்து, அதன்மேல் உருவாகும் வளர்ச்சித் திட்டங்களை ஆயர்கள் ஏற்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

வளர்ச்சி என்ற பெயரில், அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் எவையுமே மக்களுக்குப் பயன்பட்டதாகத் தெரியவில்லை என்றும், தொழில் வளர்ச்சி என்றும், வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்றும், மக்களுக்கு ஆசைகாட்டி திசை திருப்பும் அரசின் போக்கைக் கண்டிக்கிறோம் என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.

வளர்ச்சி என்ற பெயரில், இன்றைய அரசுகள் முன்னெடுக்கும் திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு ஏகபோகங்களுக்கும் துணைபோய்க்கொண்டிருக்கின்ற நிலையில், சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைச் சாலையும், மக்களுக்கான சாலையாக இருக்கப்போவதில்லை என்பதால், பசுமை வழிச்சாலை என்ற பெயரில், மக்களை, அவர்களின் வாழ்வாதாரம் எனும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இவ்வன்முறை திட்டத்தைக் கைவிட தமிழக அரசை வேண்டுகிறோம் என்றும், தமிழக ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.  

அபகரிக்கப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்குவது உரிய தீர்வாகாது என்றுரைக்கும், தமிழக ஆயர் பேரவையின் அறிக்கை, இழப்பீடு என்ற பெயரில், ஏழை மக்களிடம் ஆசைகாட்டி, நிலங்களை அபகரிப்பு செய்வது, விரும்பாத மக்களிடம் அச்சுறுத்தி நிலங்களைக் காப்பற்றுவது ஒருபக்கம் எனில், மக்களின் வாழ்வாதாரத்தைத் தொலையச் செய்து அமைக்கப்படும் சாலைகள், மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானதென்பதால், மக்களைத் திரட்டிப் போராடும் சமூக ஆர்வலர்களை அச்சுறுத்தல், சிறைவைத்தல், அவர்களுக்கு சமூக விரோதிகள் அல்லது தீவிரவாதிகள் என்று பெயர்சூட்டி, போராட்ட நோக்கத்தையும் போராளிகளையும் அவமானப்படுத்தும் பணியையும் காவல்துறை வழியாக அரசு செய்து வருகிறது என்றும், குறை கூறியுள்ளது.

பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எட்டு வழிகளைக் கொண்ட இந்த பசுமை வழிச்சாலை திட்டம், நூறு ஹெக்டர்கள் காடுகள் பகுதிக்கு அச்சுறுத்தல் எனவும், 274.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இச்சாலையில், 23 கிலோ மீட்டர் தூரம், காடுகளில் அமைந்துள்ள 16 கிராமங்கள் வழியாகச் செல்லும் எனவும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Ind.Sec./வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.