2018-07-11 16:31:00

இந்தியாவில் மறைபரப்புப்பணி குறித்து ஆயர்களின் ஆலோசனை


ஜூலை,11,2018. இந்தியத் தலத்திருஅவையின் முக்கியமான பணி, கிறிஸ்துவின்  காயங்களைத் தொடுவது என்று, மும்பைப் பேராயரும், இந்திய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ள வேண்டிய மறைபரப்புப் பணிகள் குறித்து கலந்து பேச, பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர்களின் கூட்டம், மும்பை நகரில் அண்மையில் நிறைவுற்றதையடுத்து, கர்தினால் கிரேசியஸ் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

இயேசுவின் காயங்கள் வழியே அவரது உயிர்ப்பை இன்னும் ஆழமாக உணர்ந்த புனித தோமா வழியே இந்திய நாடு பெற்றுக்கொண்ட நற்செய்தியை, இன்று மீண்டும் மக்களுக்குப் பறைசாற்ற, கிறிஸ்துவின் காயங்களாக விளங்கும் வறியோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரை இந்தியத் திருஅவை தொடவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவை, கடந்த ஆண்டு போபால் நகரில் நிறைவேற்றிய தீர்மானங்களை மையப்படுத்தி இந்தக் கூட்டம் நடைபெற்றது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.