2018-07-11 15:43:00

உலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்


ஜூலை,11,2018. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலர்களில் ஒருவரும் துறவு சபையின் தலைவருமான புனித பெனடிக்ட் திருநாள், ஜூலை 11 இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருநாளை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"நிறுவனங்களின் இதயமாக தனி மனிதர்கள் விளங்கும்போது, ஐரோப்பா தன் நம்பிக்கையை மீண்டும் கண்டடைகிறது. புனித பெனடிக்ட், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

டப்ளின் உலக குடும்பங்கள் மாநாடு

மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் வேளையில், ஆகஸ்ட் 26, ஞாயிறன்று டப்ளின் நகரில் அவர் தலைமையேற்று நிகழ்த்தும் திருப்பலிக்கென ஏற்பாடு செய்யப்பட்ட 5,00,000 நுழைவுச் சீட்டுக்கள் அனைத்திற்கும் மக்கள் முன்பதிவு செய்துவிட்டனர் என்று, அம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குடும்பங்கள் மீது கொண்டிருக்கும் தனித்துவமிக்க பாசத்தின் எதிரொலியாக, மக்களிடையே இத்தகைய ஆர்வம் உருவாகியுள்ளது என்று, இந்த மாநாட்டின் செயலர், அருள்பணி டிமத்தி பார்ட்லெட் (Timothy Bartlett) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதேவண்ணம், Knock தேசிய அன்னைமரியா திருத்தலத்தில் நடைபெறும் நிகழ்வுக்கென தயாரிக்கப்பட்ட 45,000 நுழைவுச் சீட்டுகள் அனைத்திற்கும் மக்கள் முன்பதிவு செய்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 26ம் தேதி முடிய அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்ள 116 நாடுகளிலிருந்து மக்கள் வருகை தருகின்றனர் என்றும், திருத்தந்தை நிறைவேற்றும் இறுதித் திருப்பலியில் கலந்துகொள்வோரில் பாதிக்கும் மேற்பட்டோர், 18 வயத்துக்குட்பட்டவர்கள் என்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.